Monday, June 23, 2014

உன்னை சுற்றி உள்ள பிரபஞ்சம் சதா உன்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறது ! உனக்குத்தான் கேட்கவில்லை ?

நீங்களோ நானோ ஒரு போதும் தனியாக இல்லை. எம்மை சுற்றி உள்ள இந்த பரந்த விரிந்த பிரபஞ்சம் சதா எங்களுடன் பேசுகிறது சிரிக்கிறது இடையிடையே கோபிக்கிறது இன்னும் என்னனவோ உணர்ச்சிகளையும் செய்திகளையும் எம்மை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிறது.
நாம் தான் கண்களையும் காதுகளையும் மட்டுமல்லாமல் மனதையும் மூடிக்கொண்டு விட்டோம், அதனால் அவற்றின் இனிய சங்கீதத்தை எம்மால் ரசிக்க தெரியாமல் இருக்கிறது.
உண்மையில் நாம் வேறு பிரபஞ்சம் வேறல்ல . இன்னும் சரியாக சொல்லப்போனால் எமது கண்களினூடாக இந்த உலகத்தை பிரபஞ்சம் பார்க்கிறது , எமது காதுகளினூடாக இந்த உலகின் இனிய நாதத்தை அது கேட்கிறது, எமது மனதின் ஊடாக அதுவும் தனது உணர்வுகளை சிந்தனைகளை அனுபவிக்கிறது.
கோடானு கோடி உயிரனங்கள் எல்லாம் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பக்கங்களாகும் .
எமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள உறவு அதி அற்புதமானது .அதை புரிந்துகொண்டவர்கள் அதிஷ்டசாலிகள்.
எமது ஒவ்வொரு அசைவும் பிரபஞ்சத்தின் நோக்கத்திற்கும் எமது நோக்கத்திற்கும் இசைவாக இருக்கும் பொழுது நாம் நினைத்ததெல்லாம் நிறைவேறுகிறது,
எமது வெற்றி தோல்வி எல்லாம் எம்மீது தான் தங்கி இருக்கின்றது.
ஆனால் எமக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் உணர்வும் எம்மோடு கலந்து தான் இருக்கிறது,  அதை புரிந்து கொள்ளாவிடில். எமது விருப்பங்களும் விளைவுகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு கொண்டே தான் இருக்கும்.
நாம் தவறான பாதையில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் எம்மை சுற்றி உள்ள பிரபஞ்சமானது எமக்கு பலவழிகளிலும் நல்ல வழியை காட்ட முயற்சிக்கும் . அதையும் மீறி நாம் தவறான பாதையில் சென்றாலும் எம்மை காப்பாற்ற அது சதா சரியான வழியை காட்டவே முயற்சிக்கும்,  ஏனெனில் அது வேறு நாம் வேறல்ல . ஆனால் தவறையே ரசிக்க நாம் முடிவு செய்துவிட்டால் அதற்கும் அது உதவி செய்யும்,  அந்த தவறில் இருந்து நாம் ஒரு அற்புதமான பாடத்தை படிக்கலாம் அல்லவா ? அதுவும் கூட ஒரு நன்மைதானே ?

பிரபஞ்சத்திற்கு உண்மையில் நல்லது   கெட்டது என்று ஒன்றுமே இல்லை .
நமது பிறவியின் நோக்கத்தை நாம் நிறைவேற்ற முயலும் போதெல்லாம் அது எமக்கு உதவி செய்யும் .
நாம் போகவேண்டிய ஊர் ஒன்றாக இருக்க நாமோ தவறான பாதையில் வேறு ஒரு ஊரை நோக்கி போனால் அந்த தவறை பிரபஞ்சம் சுட்டி காட்டும் . அது ஒரு அவதான குறிப்பே அல்லாது நாம் போகும் பாதை சரி அல்லது பிழை என்ற கருத்தில் பிரபஞ்சம் சுட்டி காட்டுவதில்லை. /
எல்லாப்பாதையும் அதன் பாதைதான்,
வரப்போகும் சம்பவங்களை நாம் சிலவேளைகளில் கனவுகளில் காண்பதுண்டு, அக்கனவுகள் மூலம் சில ஊக செய்திகளை நாம் பெறுவதுண்டு,
எமது மனதில் உள்ள எண்ணங்களே கனவுகளாக காட்சி அளிக்கின்றன என்று பலர் கூறுகிறார்கள்.
எனது அனுபவத்தில் கனவுகள் மிகவும் பொருள் பொதிந்தவை ஆகும்.
பலதடவைகள் நான் எதிர்வரும் சம்பவங்களை கனவில் கண்டிருக்கிறேன்.
கனவுகள் மட்டுமல்ல சிலசமயம் மனதில் அபூர்வமாக தோன்றும் சில எண்ணங்கள் கூட தீர்க்க தரிசனமானது ,
பகுத்தறிவு என்ற போர்வையில் பழைய விஞ்ஞான இருட்டு அறையில் விரும்பி இருப்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.
தெரியவே கூடாது என்று முடிவு எடுத்து விட்டால் பிரபஞ்சம் கூட அதற்கே உதவி செய்யும் ஏனெனில் உங்களின் விருப்பம் தான் பிரபஞ்சத்தின் விருப்பமும் கூட.
உங்களின் விருப்பங்களை உங்களின் ஊடாக தானே நீங்கள் ஆக இருந்து அனுபவிக்கும் உன்னத நாடகத்தை பிரபஞ்சம் ஆனது உங்களுடன் சேர்ந்து ரசிக்கிறது,
இதை புரிந்து கொண்டால் பிரபஞ்சத்தின் நாடகத்தை நீங்களே பிரபஞ்சமாக இருந்து ரசிக்கலாம் .

No comments: