Monday, September 17, 2018

இறந்தவர்களோடு பேசுதல் சாத்தியமா? அவர்கள் தொடர்பில் உள்ளார்களா? வழிகாட்டுகிறார்களா?

இறந்தவர்களோடு பேசுதல் அல்லது அவர்களோடு  தொடர்பு
கொள்ளமுடியுமா என்பது பற்றிய விவாதங்கள் மனித இனத்திற்கு புதிது அல்ல .
உண்மையில் மிகவும் ஆச்சரியம் தரத்தக்க செய்திகள் அல்லது நம்பிக்கைகள் வரலாற்றில் தாராளமாக உள்ளன.
எந்த விடயத்தையும் மிகவும் தர்க்க ரீதியாக ஆராய்வதே ஒரு நேர்மையான ஆய்வாளனின் கடமையாகும்.
ஆய்வுகள்  எப்பொழுதும் நேர்மையாக மேற்கொள்ள படுவதில்லை.
பல சமயங்களில் அவை தங்களுக்கு சார்பான கருத்துக்களை நிறுவுவதற்கு செய்யப்படும் ஆய்வாகவே இருந்து விடுவதுண்டு.
பௌதீக இரசாயன கணித ஆய்வுகளை போலவே ஆத்மீகம் கடவுள் போன்ற விவகாரங்களிலும் ஏராளமான போலியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்படிப்பட்ட போலி ஆய்வாளர்கள் எல்லா மதங்களிலும் தாராளமாக உலா வந்துள்ளனர்.
ஏனைய ஆய்வுகளிலும் பார்க்க மதங்கள் அல்லது கடவுள் பற்றிய போலி  ஆய்வுகள் மிகவும் இலாபம் தரக்கூடிய வியாபாரம் ஆகிவிட்டிருக்கிறது.
.
இன்று மனித குலத்தின் பெரும் துன்பங்களுக்கு இந்த போலி ஆய்வாளர்களும் ஒரு முக்கிய  காரணமாகும். இவர்கள் தங்களை ஆய்வாளர்கள் என்று கூட கூறமாட்டார்கள் .
தாங்கள் உயர்ந்த வழிகாட்டிகள் மேலான பெரியோர்கள் என்றெல்லாம் மக்களை நம்பவைத்து அவர்களின் சுய சிந்தனையை ஒரே அடியாக நொறுக்கி  விட்டனர்.
இந்த விடயத்தை பற்றிய ஆய்வில்  நான் ஒரு மாணவன்.
எந்த பள்ளிக்கூடமும் நான் படிக்க விரும்பிய இந்த பாடத்தை சொல்லி தரவில்லை.
இந்த முழு பிரபஞ்சமும் ஒரு பள்ளிக்கூடம்தான்  என்று புரிய எனக்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

நாம் திறந்த மனதோடு கண்ணை திறந்து பார்க்கும் வரை இந்த பிரபஞ்சம் நமக்கு தெரியவராது.
கண்ணிருக்கும் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல.

திறந்த மனதோடு அறியவேண்டும் என்ற ஆவலோடு பார்ப்பவருக்கு மட்டுமே சரியான காட்சிகள் தெரியவரும்.
காது இருப்பதானால் மாத்திரம் நாம் இந்த பிரபஞ்சம் பேசுவதை கேட்கிறோம் என்று ஒருபோதும் கூற முடியாது.
கேட்பதற்கு உங்கள் மனம் தயாராக இருந்தால் மட்டுமே அது பேசுவது உங்களுக்கு கேட்கும்.
பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் மனிதர்களை விட இதர உயிரனங்களுக்கு மிகவும் அதிகமாக உண்டு.

இது பற்றி ஏராளமான நல்ல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன,
மத நம்பிக்கை கலக்காத நூல்கள் ஓரளவாவது நேர்மையான ஆய்வுகளை பற்றி கூறி உள்ளன.

தமிழில் ஏனோ சரியான நூல்கள் இல்லை . அல்லது அது பற்றி  எனக்கு சரியாக  தெரியவில்லை.

மதம் சார்ந்த விடயங்களில் ஒருபோதும் நேர்மை இருந்ததில்லை.
மத நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்ட  ஏராளமான நூல்களை வாசித்துள்ளேன் .
அவை பெரும்பாலும் மிகவும் குழந்தை தனமான அம்புலி மாமா கதைகளாகத்தான் இருக்கின்றன.
அவற்றால் எந்த பயனும் மனித குலத்திற்கு கிடைக்க போவதில்லை.
அழகான பிரபஞ்சத்தின் அற்புதங்களை எல்லாம் தங்கள் மதங்களுக்குள்  அடக்கி  பின்பு அதையும் கூறு போட்டு விற்றுவிடும் முட்டாள்தனமாகவே அவை உள்ளன.

இன்றிருக்கும் பல விஞ்ஞான  வசதிகள் அந்த காலத்தில் இருந்ததில்லை .
அதன் காரணமாக மனிதர்களின் கவனம் பல வழிகளிலும் சிதறுண்டு போகும் ஆபத்து மிகவும் குறைவாக இருந்தது .
ஆனால் இன்று நம்மை சுற்றி உள்ள பொருட்கள் வசதிகள் வாய்ப்பு எல்லாம் கூட கூட அவை எல்லாம் ஒரு பெரிய இயந்திரம் போலாகி விடுகிறது.
இப்படி இயந்திரமாகிவிட்ட சூழல் எமது நுண் உணர்வை மெல்ல மழுங்கடித்து விடும்.
நுண்ணுணர்வுகள் இல்லையேல் மனமும் மெல்ல தனது இருப்பை இழந்து விடும் .