Tuesday, December 8, 2015

நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? இதை உறுதிப்படுத்தினால் அது நிச்சயம் நிறைவேறும்...அது ஒரு ரகசியம் அல்ல ...

ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கை ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்க பட்டுக்கொண்டே ஓடுகிறது.
நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால்
தீர்மானிக்கப்படவில்லை,
இதை நம்புவது அல்லது ஏற்று கொள்வது மிகவும் கடினமான காரியமாகும்.
நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நாம் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாது,

எமது வாழ்க்கை  அல்லது எமது நோக்கம்  எமது விருப்பப்படியே  உருவாக்கப்படுகிறது எனில்,
ஏன் நாம் விரும்பியபடி எமது வாழ்க்கை  அமைவது இல்லை?

நிச்சயமாக நாம் விரும்பியபடிதான் எமது வாழ்க்கை அமையும்.
இதில் சந்தேகமே தேவை இல்லை,
நாம் எதை விரும்புகிறோம் என்பது மிகபெரும் உள்ளார்த்தம் உள்ள கேள்வியாகும்.
நாம் விரும்புவது என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் நாம் நிச்சயம் விரும்புகிறோமா?
நாம் விரும்பவில்லை என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் உண்மையில் நாம் விரும்பவில்லையா?
உதாரணமாக நாம் ஒருவரும் விபத்துக்கள் எமக்கு நடக்க வேண்டும் என்று விரும்புவதில்லை .
ஆனாலும் எமக்கு விபத்துக்கள் சிலவேளை நடக்கின்றதே?
அது எப்படி?
எமக்கு ஒரு விபத்து நடந்து விட்டால் அது எப்படி எமக்கு சம்பவித்தது?
நிச்சயமாக நாம் அதை விரும்பி இருக்க முடியாது.
நிச்சயம் நாம் அதை உருவாக்கி இருக்கவும் முடியாது.
எமக்குள் இருக்கும் எது அந்த விபத்தை எம்மை நோக்கி ஈர்த்தது?
நிச்சயமாக அந்த விபத்தை ஈர்க்கும்  ஏதோ ஒரு சக்தி எம்முள் இருந்துதான் உருவாக்கி இருக்கிறது.
எம்மை அறியாமலே நாம் உருவாக்கும் சக்திகளுக்கு இயங்கும் ஆற்றல் இருக்கிறது.

Saturday, November 21, 2015

பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாருங்கள்!

கடந்த சில ஆண்டுகளாக என்னுள் ஆத்மீகம் பற்றிய பல கேள்விகள் 
உருவானது . அந்த கேள்விகள் உண்மையில் என்னை விடுதலை செய்தது என்றுதான் கூறவேண்டும்.
அடடா இதுவரை காலமும் எனது சிந்தனை என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தது உண்மையியல் ஒரு இரவல் சிந்தனைதான் என்று புரிந்தது,
கடவுள் இருக்கிறாரா இல்லையா?
கடவுள் என்று எதை நான் கருதுகிறேன்?
என்பது  போன்ற கேள்விகளில் இருந்து நான் கொஞ்சம் விடுதலையானேன்.
அதன் பின்பு சுயமாக சிந்தித்து பார்க்க தொடங்கினேன்,
சுயமாக சிந்தித்தல் அதாவது பகுத்து அறிதல் /பகுத்தறிவு என்பது நமது நாட்டில் எப்போதுமே அதிகம் கேட்டிராத ஒரு விடயமாகும்.
எப்போதும் சதா கந்தசஷ்டி கவசம் அல்லது கர்த்தர் ஊழியம் அதுவும் இல்லாவிட்டால் பள்ளிவாசல் எல்லாவற்றிகும் மேலாக புத்தமேடம்.
இவற்றை எல்லாம் தாண்டி மக்களை சிந்திக்க தூண்டுவது இலகுவான காரியம் அல்ல. அதனால்தானோ என்னவோ மக்களுக்கு மகிழ்வாக வாழ்வதுவும் கூட இலகுவான காரியம் அல்ல என்பதாகி விட்டது,
பகுத்தறிவு கருத்துக்களை நான் சிந்திக்க தொடங்கிய பொழுது எனக்கு சற்று குழப்பம் ஏற்பட்டது.
மேலை நாட்டு பகுத்தறிவு கோட்பாடுகள் அல்லது இயக்கங்கள் எல்லாம் தர்கீக பகுத்தறிவு கோட்பாடுகள் அல்லது அமைப்புக்களாக இருந்தன.

Saturday, October 31, 2015

உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள்....


இன்றைய பகுத்தறிவு வாதம் என்பது சென்ற அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் உருவான கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட மாறியதாக தெரியவில்லை.
நூற்றாண்டுக்கு முந்தைய பகுத்தறிவு கோட்பாடுகளையே இன்னும் பின் பற்றுகிறார்கள்.

ஆத்மீகவாதிகள் அல்லது சமயவாதிகள் எப்படி எப்படியெல்லாம் அறியாமையில் மூழ்கி உள்ளார்களோ அவர்களை போலவே இந்த பகுத்தறிவுவாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு இறுகிய  நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.
இது கொஞ்சம் இடக்கு மிடக்கான கருத்தாக தோன்றலாம்.
 இவர்களின் பகுத்தறிவு பெரும்பாலும் தந்தை பெரியாரின்  கருத்துக்களோடு  ஒத்து  இருக்கிறது,
தந்தை பெரியாரின்  சுயமரியாதை  போராட்டம் ஜாதி அடக்குமுறைக்கு எதிராகவே  ஆரம்பிக்கப்பட்டது.

Thursday, February 19, 2015

Thought is a Invitation எண்ணங்கள் எல்லாமே சம்பவங்களுக்கான அழைப்பிதழ்கள்தான்

உங்களை நோக்கி வரும் நிகழ்சிகள் அல்லது சம்பவங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழை பெற்ற பின்பே வருகின்றன.
உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் செல்வங்கள் இன்பங்கள் அல்லது துன்பங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழ் கிடைக்காமல் உங்களை நோக்கி வரமுடியாது. இது நிச்சயமான உண்மையாகும்
ஒருவரின் காதலோ அல்லது கோபமோ மட்டும் அல்லாது விபத்தும் லாட்டரி அதிஷ்டமும் கூட உங்கள் அழைப்பிதழை பெற்று உங்கள் அனுமதியுடன்தான் உங்களை வந்தடைகின்றது.
இதை விளங்கி கொள்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால் , நீங்கள் உங்களை அறியாமலேயே அழைப்பிதழ்களை அள்ளி வீசி கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு விருப்பமான விடயங்களுக்கும் வீசுகிறீர்கள்.
உங்களுக்கு விருப்பமே இல்லாத விடயங்களுக்கும் கூட அழைப்பிதழ்களை அள்ளி அள்ளி வீசுகிறீர்கள்.
நீங்களே அழைப்பை அனுப்பி அனுமதியும் கொடுத்துவிட்டு பின்பு எனக்கு ஏன் இது வரவேண்டும் அல்லது இப்படி நடக்கவேண்டும் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் குழம்புகிறீர்கள்.
தெரிந்தோ தெரியாமலோ உங்கள் மனதில் வந்து போகும் எண்ணங்கள் எல்லாமே மின்சாரம்தான் . அவை மிகவும் சக்திவாய்ந்த தொழிற்சாலைகள்தான் .
இந்த பிரபஞ்சத்திற்கு நல்லது கெட்டது விரும்பியது வெறுத்தது என்று ஒன்றும் கிடையாது.
உங்கள் மனம் என்ற தொழிற்சாலையில் வரும் மூலபொருள் அதாவது எண்ணங்கள் எல்லாமே  சம்பவங்கள்  அல்லது பொருட்களாக உருப்பெற்று வெளியேவரும் .

Friday, February 6, 2015

பக்தி என்றால் என்ன? பயம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றுதான்!

பக்தி என்ற சொல்லை கண்டு பிடித்தவர்தான் மனிதர்களிலேயே மிகவும் போலியான மனிதர். உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெறும் மினுங்கல் பூச்சு பூசி வெளிப்படுத்த கண்டு பிடிக்கப்பட்டது தான் இந்த பக்தி என்ற சொல். அன்பு என்பது உண்மையில் தானாகவே வரவேண்டியது அது ஒன்றும் தேவாரம் பாடி வரவழைக்க முடியாது. நெஞ்சு நிறைய பயம் உள்ளவரை நிரந்தர அடிமையாக்க உருவாக்கப்பட்ட சொல் இது. ஒரு வாகனத்தின் உதிரிப்பாகம் அந்த வாகனத்தின் மீது பக்தி கொள்ளுமா? பல உதிரிப்பாகங்களும் சேர்ந்தது அல்லவா ஒரு வாகனம் ? தான் வேறு வாகனம் வேறு என்று உதிரிப்பாகங்கள் எண்ணுவதில்லையே ? அப்படி எண்ணி உதிரிப்பாகங்கள் ஒவ்வொன்றாக பிரிந்து போய்விட்டால் அது ஒரு வாகனம் அல்லவே? முழு பிரபஞ்சமும் ஒரு வாகனம் போல இயங்கும் இயங்கு சக்தி அல்லவா ? அதில் உள்ள சகல உதிரிப்பாகங்களும் பிரபஞ்சத்தின் பங்காளிகள் அல்லவா ? பங்காளிகள் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருப்பது இயல்புதானே? இதில் ஏன் பயம்/பக்தி வரவேண்டும் ? இந்த பயத்தால் யாருக்கு லாபம் ?

எல்லோருக்கும் இறுதியில் இனாமாகவே கிடைக்கப்போகும் காரட் அதுதான்...

ஆத்மானந்தம் ஆத்மானுபூதி அல்லது ஸ்திதப்ரக்ஞை என்றும் ஆங்கிலத்தில் self realization or Enlightenment என்றும் பொதுவாக குறிப்பிடப்படுவது  மனத்தின் இருப்பு  இல்லாத ஒரு நிலையில்  ஆத்ம அனுபவித்தில் லயித்திருக்கும்  நிலையாகும்.
இந்த உன்னத நிலையினை அடைவதற்காக பக்திமார்க்கம்  யோக மார்க்கம் ஞான மார்க்கம் தியான மார்க்கம் என்று பலவிதமான வார்த்தைகளில் குறிப்பிடப்படும்  வழிகளை சிரத்தையாக கடைப்பிடித்து மனித பிறவியின் உன்னத நிலையை அடையவேண்டும் என்றுதான் எல்லோரும் போதிக்கிறார்கள்.
இது  சுத்தமான வடிகட்டின  பித்தலாட்டமாகும்.
இந்த சமய குருமாரும் சாமிகளும்  ஆசாமிகளும் குறிப்பிடும் இந்த ஞானம் அல்லது வெங்காயம் எனப்படுவது அப்படி ஒன்றும் தேட கிடைக்காத பெரும் நிதியம் அல்ல.
எல்லோருக்கும் இறுதியில் இனாமாகவே கிடைக்கப்போகும் காரட் அதுதான், நீங்கள் வேண்டாம் என்றாலும் அந்த காரட் உங்களுக்கு கிடைக்க போகிறது என்பதே உண்மை, இதை மிகவும் Authentic க்காகவே சொல்கிறேன் . நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம் , எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை.