
மனிதர்களின் சுயசிந்தனையை நிர்மூலமாக்கும் முயற்சிதான் அந்த யுத்தம்.
அதில் பெரும்பாலும் சுயசிந்தனை தோற்ற வண்ணம்தான் உள்ளது. வெளிப்பார்வைக்கு மனிதரின் சுயசிந்தனை வெற்றி பெற்று உள்ளதாக தெரிகிறது.
சில சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் சுயசிந்தனை தனது இருப்பை தொலைத்துவிட்டு திண்டாடிகொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏராளமான உதாரணங்கள் கூற முடியும். அவற்றை விலாவாரியாக எழுதினால் வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கும். எனவே அதன் அடிப்படையான சில தகவல்களை பற்றி மட்டும் தற்போது அலசுவோம்.
இயற்கையின் மிக அழகான வெளிப்பாடுகளில் மனிதர்களும் ஒரு அற்புத படைப்பே.
இங்கே மனிதர்கள் என்று குறிப்பிடும் பொழுது மனிதர்களின் மனம் உடல் இரண்டையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன். ஆத்மாவை பற்றிய கேள்வியை கட்டுரையின் முடிவில் பார்ப்போம்.

மனம் ஒரு மொழிபெயர்ப்பாளர். நாம் காணும் அல்லது கேட்கும் அல்லது ஏதோவொரு புலன்வழியாக உணர்பவற்றை அறியத்தருவது மனம்தான்.
இந்த மனம் எவ்வளவு தூரம் செயலிழந்து போகிறது அவ்வளவு தூரம் நாம் சுய செயல் அற்றவர்கள் ஆகிவிடுவோம்.
ஒருவரை சுயமாக சிந்திக்க செயல்பட முடியாதவாறு அவரின் மனதை கட்டுப்படுத்தி விட்டால் அவர் ஒரு உயிரற்ற பொருள் போலாகிவிடுவார்.
மனம் ஏதோவொரு விடயத்தில் தனது சுயத்தை இழந்து விட்டால் அது ஒரு பெறுமதி அற்ற மனம் என்று ஆகிவிடுகிறது.
மனதின் பெறுமதி என்பது அது எவ்வளவு தூரம் சுயமாக சிந்திக்கும் தன்மை வாய்ந்ததது என்பதை பொறுத்தே இருக்கிறது.

இது இயற்கைக்கு நேர் எதிரானது.
இயற்கையில் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்துவ பண்புடன் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மரத்தை போல இன்னொரு மரம் இந்த முழு உலகத்திலும் கிடையாது.ஒரு இலையை போல இன்னொரு இலை கூட கிடையாது.நுணுக்கமாக பார்த்தால் நிச்சயம் ஒவ்வொரு இலையிலும் கூட வித்தியாசம் தெரியும்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உலகவரவுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.
நிறுவன படுத்த பட்ட சமயங்கள் எல்லாம் மனிதர்களின் மனதை இல்லாமல் செய்யும் ( சுய சிந்தனையை ) அக்கிரமத்தைதான் செய்து கொண்டு இருகின்றன.
சமயங்களின் இருப்புக்கு சுயசிந்தனை அற்ற ரோபோக்கள் தேவை.
மனிதர்களை ரோபோக்களாக மாற்ற அவை கண்டுபிடித்த ஏராளமான பொய்யான கோட்பாடுகள் உள்ளன.
இவர்கள் கூறுவது போல மனம் இல்லாத நிலை ஒன்று சாத்தியமானால் அது ஒன்றும் பெரிய காரியமே அல்ல . எந்நாளும் நித்திரையில் அதுதான் நடக்கிறது.
அடுத்ததாக போதைதரும் பொருள்களிலும் இந்த மனம் ஒடுங்குதல் என்பது ஓரளவு நிகழ்கிறது. இமய மலையிலும் சரி ஆப்கானிலும் சரி இந்த கஞ்சா அபின் மற்றும் எருசலமில் வைன் போன்ற பழக்கவழக்கங்கள் எப்படி கொஞ்சம் தூக்கலாகவே வளர்ச்சி அடைந்தது என்பதை பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா?
மனம் இல்லாத நிலை மொழிபெயர்பாளன் இல்லாமல் வேற்று மொழி பேசுபவர்கள் மத்தியில் இருப்பது போன்றது.
இந்த உலகத்தின் மொழி உங்கள் மனம்தான்.
மனத்தினை கொண்ட பிராணி என்பதால்தான் நீங்கள் மனிதர் என்று அழைக்கப்படுகிறீர்கள்.
இந்த மனம் இல்லாவிடில் இந்த உலகத்தில் உங்களுக்கு ஒன்றுமே இல்லை. மனம்தான் உங்களுக்கும் இந்த உலகுக்கும் உள்ள பிணைப்பு.. அதுதான் உங்கள் அத்திவாரம்.
இன்பத்தை உணரவும் துன்பத்தை உணரவும் மனம்தான் உங்கள் மூச்சு காற்று.
மனம் என்ற மூச்சு காற்றை நிறுத்துவதே பெரும் தவம் யோகம் என்றெல்லாம் சமயவாதிகள் மனிதர்களை ஏமாற்றுகிறார்கள்.

இதை யாரும் நம்பலாம் நம்பாது விடலாம்
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு சமய அடிப்படைவாதி. அவன் அருளாலே அவன்தாள் வணங்கும் பாக்கியம் வேண்டும் என்பது போன்ற உல்டாக்க்களில் மிகவும் நம்பிக்கை உடையவன்.
கேள்விப்படும் அத்தனை சாமியார்களின் தரிசனம் மற்றும் யார் யாரோ எழுதிய நூல்கள் என்றெல்லாம் வாங்கி இரவு பகலாக படிப்பதுவும் இந்த பிறவியிலேயே ஞானம் முக்தி போன்ற எல்லாம் ஹோல் சேலாக வாங்கி விடவேண்டும் என்ற சிரத்தை கொண்டிருந்தவன்.
ஒரு நாள் எனக்கு ஒரு அனுபவம் கிட்டிற்று. எனது பலவருட முயற்சியின் பின்பு ஒரு கிராஸ் போர்டர் அனுபவம் கிடைத்தது.

எழுத்தில் கூற முடியாத ஒரு நிலையில்.. எல்லையற்ற சுதந்திரம் .. அல்லது எல்லையற்ற ஒரு ஆனந்தம் ,, என்று எதுவேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம். சில மணித்தியாலங்கள் அது தொடர்ந்தது .
எனது உடல் ரெயிலில் பயணம் செய்தது .சுமார் ஏழு மணித்தியாலங்கள் எனது உடல் எல்லா கருமங்களையும் தானே செய்தது. அதை நான் வெளியில் இருந்து நிச்சலனமாக பார்த்துகொண்டிருந்தேன்.
அந்த அனுபவம் ... சொல்ல தெரியவில்லை.
பார்க்கும் பொருட்கள் நானேஎன்பதாகதெரிந்தது . I am that அல்லது நானே அது ,தத்வமசி என்றெல்லாம் கூறப்படுகிறதே அதுதான் அந்த அனுபவம். அவசரப்படாதீர்கள் அதை எதோ ஒரு மேலான சமாசாரம் என்று நான் புல்லரித்து கூறப்போகிறேன் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
பார்க்கும் பொருளுக்கும் இடையில் மனம் என்ற அந்த மொழிபெயர்ப்பாளன் காணமல் போய்விட்டான். எனவே நானே அதுவாக இருந்தேன். வேறொன்றும் இல்லை நான் வேறு அதுவேறு என்று எனக்கு பாகுபடுத்தி காட்ட என் மனது எங்கோ காணமல் போயிருந்த நேரம் அது. அதுவே நிரந்தரமாக
இருந்திருந்தால் சில நாட்களில் நான் இறந்து போயிருப்பேன். எனக்குதான் பசி தாகம் போன்ற எதுவும் இருக்கவில்லையே? என் கண்கள் கூட சுமார் ஏழு மணித்தியாலங்கள் இமைக்க வில்லை அசையவும் இல்லை. எனது உடலின் நடைமுறை இயக்கம் ஒன்றுமே இருக்கவில்லை. என்னை சுற்றி இருக்கும் பிரபஞ்சம் என்னை எங்கோ தள்ளி கொண்டு சென்றது.அவ்வளவுதான்.
அந்த அனுபவம் இன்னும் சரியாக சொல்லப்போனால் ஒரு இறப்பு என்றும் கூறலாம். அதற்கு சமாதி என்று ஒரு தெய்வீக மூலாம் போசுவது மோசடி அல்லது அறியாமை எனலாம்.
இது நடந்து நாட்கள் மாதங்கள் வருஷங்களுக்கு பின்புதான் எனக்கு பல விடயங்கள் தெளிவாக விளங்க தொடங்கியது.
அந்த அனுபவம் சொற்பநேரமே இருந்ததால் அது எதோ ஒரு அற்புதமாக தெரிந்தது.அதுவே நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது என்ன நிலை?
ஒன்றுமே இல்லை.
ஆம் ஞானத்தை தேடுகிறேன். முக்தியை தேடுகிறேன் , பிரம்மஞானம் அல்லது ஸ்திதபுருஷக்தம் என்பதெல்லாம் சமயவாதிகள் கண்டுபிடித்த சமாச்சாரங்கள் தான். அவை உண்மையில் ஒன்றுமே இல்லை.
தேடி தேடி இறுதியில் கண்டு பிடிப்பது எதுவென்றால் ஒன்றுமே இல்லை.
தேடி தேடி கண்டு பிடிக்க அங்கு ஒன்றுமே இல்லை.
Nothing ஐ தேடி things எல்லாவற்றையும் இழப்பது எவ்வளவு அறியாமை?
ஆனால் இந்த உலகில் அற்புதம் இருக்கிறது.
உங்கள் உடல் உங்கள் மனம் இரண்டுமே அற்புதம்தான்.
இவை மீண்டும் கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம். ஆனால் இப்பொழுது கிடைத்திருப்பது நிஜம்.அதை விட பூஜ்யம் பெரிது என்று உங்களை ஏமாற்றும் மாய மான்களிடம் சிக்கி மனதை ஒரு கணமும் இழந்து விடாதீர்கள்.
உங்கள் மனம் உங்களோடு நல்ல ஆரோக்கியமாக நீங்கள் நினைத்ததை அடைய உதவிடும் அற்புத கருவியாக இருப்பதை கண்டு கொள்ளுங்கள்.

அதை தூக்கி எறிந்து விடும் முட்டாள் தனத்துக்கு தியானம் பக்தி மற்றும் என்னனவோ பெயர்கள் .. ஏமாந்தது போதும்.
தியானம், பக்தி அல்லது பியர் விஸ்கி போன்ற போதை தரும் வஸ்துக்கள் தற்காலிக அமைதி அல்லது சுகத்தை தரக்கூடும்.
Meditation என்பது ஒரு Medication போன்று தற்காலிக அமைதியை தரக்கூடும்.அந்த அளவில் மட்டும் அது நல்லதே. அதையும் தாண்டி அதில் ஏதோ ஒரு முக்தி இருப்பதாக எண்ணினால் ,
சாராயத்தில் கடவுளை காணும் கிராமத்து சாமியாடிகளின் நம்பிக்கை போன்றது அது எனபதை மறவாதீர்கள்.

இவர்கள் கூறும் அத்தனை பூஜ்ஜியமும் இறந்த பின்பு ஒவ்வொருவருக்கும் வரப்பிரசாதமாக கிடைக்கும்.
அது இப்போதே கிடைத்தால் ஆட்டம் குளோஸ்.
அது ஒரு பயணத்தின் படி நிலை.அது வேறு ஒரு அனுபவம். அது வரும்போது அதை பார்த்து கொள்ளலாம்.
இப்போது கண்ணை திறந்து இந்த அற்புத உலகை பாருங்கள் அதுதான் நீங்கள் உங்கள் பிறவிக்கு செய்யும் உன்னத கைம்மாறு.
No comments:
Post a Comment