Monday, January 29, 2018

தியானம் ஒரு பித்தலாட்டம் ... வாழ்வின் மீதான காதலை அழிக்க சொல்லும் மோசடி!

தியானம் மென்மையானது அற்புத சக்திகளை தரவல்லது, மேலான பேரானந்தத்தை தரவல்லது என்று  அனேகமாக  எல்லா மதங்களும் எல்லா வழிகாட்டிகளும் கூறுகிறார்கள் .
அதை  மறுத்து கூறுவது பற்றி சிந்திக்க கூட முடியுமா என்று பலரும் எண்ணக்கூடும்.. தியானத்தை புனிதப்படுத்தி அதைப்பற்றி ஆராய்வதே ஒரு பாவகாரியமாக்கி விட்டார்கள்.

நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் கூறுவதால் மட்டும் அது பற்றி நாம் பூரணமாக விளங்கி இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
தியானம் எல்லோரும் கூறுவது போல அது எந்த தீமையும் இல்லாத ஒரு நல்ல பயிற்சி அல்லது முயற்சி அல்லது பாதை என்று நான் கூறமாட்டேன்.
தியானத்தால் அடையக்கூடிய உயர்ந்த பேரானந்த பெருநிலை என்று விதம் விதமாக நூல்களும் உபதேசகர்களும் கூறும் அந்த நிலையை நான் பல வருடங்களுக்கு முன்பு அனுபவித்திருக்கிறேன் என்பதால் அதைப்பற்றிய எனது கருத்து வெறுமனே புத்தகங்களில் இருந்து பொறுக்கியதோ அல்லது பல சுவாமிகள் வழிகாட்டிகளிடம் இருந்து பெற்ற தகவல்களோ அல்ல.
நான் இங்கே எழுதுவது எனது சொந்த அனுபவத்தில் நான் அறிந்த விடயங்கள்தான்.

மீண்டும் மீண்டும் தியானம் என்பது உலகிலேயே மிகவும் உயர்ந்த உன்னதமான விடயம் என்று கூறப்படுவதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது .
அது என்னவென்றால் மனதின் வேகத்தை குறைத்து கொஞ்சம் அமைதியை தருகிறது . அந்த அமைதியின் காரணமாக உடலின் ஆரோக்கியய்த்தில் சில நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் பல தடவைகள் தியானம் செய்வதாலேயே பல விதமான மன உளைச்சலும் உடல் ஆரோக்கியம் கெடும் சந்தர்ப்பங்களும் உண்டு, அவற்றை பற்றி விளக்குவது எனது நோக்கம் அல்ல.
கால்களால் நடப்பதை விட கைகளால் நடப்பதற்கு விசேஷ திறமையும் பயிற்சியும் வேண்டும். ஆனால் அதனால் என்ன பயன் ?
அது போன்ற தேவையே இல்லாத சில இயற்கைக்கு மாறான சில சக்திகள் தியானத்தால் பெற முடியும் என்பது உண்மையே .
ஆனால் அவை எல்லாமே இயற்கைக்கு மாறான திறமைகளே. அவற்றால் ஒரு பிரயோசனமும் இல்லை,
உதாரணமாக தண்ணீரில் நடப்பது அதிசயமானதுதான் ஆனால் அதனால் என்ன பெரிய பிரயோசனம் வந்து விடப்போகின்றது?
ஆனால் அந்த சித்தியை அல்லது திறமையை பெறுவதற்கு ஒரு தியானி இழக்கும் விடயங்கள் ஏராளம்.
இந்த இடத்தில்தான் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
தியானம் செய்து பேரானந்தம் வரப்பெற்றதாக கூறுபவர்கள் உண்மையில் மிகவும் இனிமையான இந்த உலகத்தை ரசிக்கும் அற்புத வாய்ப்பை இழந்து விடுகிறார்கள் .