Friday, December 19, 2014

நாம் உலகை ரசிக்க வந்த ரசிகர்கள் ! ஆத்மாக்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே!

நான் இப்போது தெரிவிக்க போகும் கருத்து உங்களில் அநேகருக்கு ஏற்றுகொள்ள முடியாத கருத்தாகும் . மிகவும் பழகி போன ஒரு கோட்பாட்டை எழுந்த மானத்தில் தூக்கி எறிவது சுலபம் அல்ல. மிகவும் மெதுவாக படிப்படியாக தான் ஆழமாக பதிந்து விட்ட கோட்பாடுகளை மறு பரிசீலனை செய்ய முடியும் .
அடிப்படையில் எனக்கு பொறுமை இல்லை. தெரிந்ததை அல்லது நான் நம்புவதை எவ்வளவு விரைவாக வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக வெளிப்படுத்துவது. எனது சுபாவமாகும் .
அதிகம் யோசிக்கும் பொழுது நான் சுயநலவாதி ஆகிவிடுகிறேன். எனது கருத்தை நான் வெளிப்படுத்துவதால் சமுகத்தில் எனது கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டு விடும் என்ற பயம் அல்லது தயக்கம் என்னை  மௌனமாக்கி விடும் .
காலாகாலமாக நாம் எமது உடலுக்கு உரிய முதல் இடத்தை கொடுக்கவில்லை. அனேகமாக கடவுளுக்கு அல்லது நமது வழிகாட்டி குருவானவர் போன்றவர்களுக்கு முதல் இடத்தையும் அல்லது நமது ஆத்மாவுக்கு முதல் அல்லது இரண்டாவது இடத்தையும் கொடுத்து வந்துள்ளோம்
உண்மையில் எமது உடலுக்கு மிகவும் கீழான ஒரு ஸ்தானத்தையே வழங்கி வந்துள்ளோம்.
ஏனெனில் உடல் அழியக்கூடியது  ஆனால் ஆத்மா அழியாது கடவுள் அழியாது குருவானவர் அழியாதவர் என்பது போன்ற கோட்பாடுகள் எமது மனதின் ஆழத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இது உண்மையில் மிகவும் மோசமான தவறான கோட்பாடாகும்.
உடலை மேன்மை படுத்தாமல் ஆத்மாவை அல்லது கடவுளை மேன்மை படுத்துவிட்டோம்.
ஆத்மா அல்லது கடவுள் என்று ஒன்றுமே இல்லை என்று நான் கூறவரவில்லை.
ஆனால் இங்கே இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது எமது உடல் மூலம்தான் .
எமது பிறவியின் நோக்கமும் இந்த அற்புதமான உடல் மூலம் இந்த வாழ்வை வாழ்ந்து எம்மை சுற்றி உள்ள அற்புதங்கள் எல்லாவற்றையும் ரசித்து மகிழ்வதற்கே.
குதிரையின் கழுத்தில் கட்டப்பட்ட காரெட் கிழங்கு போன்று எமது கழுத்துக்கு முன்பும் ஆத்மா கடவுள் சுவர்க்கம் போன்ற சாக்கிலேட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன .அவற்றை நோக்கி நாம் ஓடிகொண்டே இருக்கிறோம் ,
வாழ்வு முழுவதும் எமக்கு முன்பே கட்டப்பட்டுள்ள  சாக்கிலேட் இனிப்புக்களை நோக்கி ஓடிகொண்டே வாழ்வும் முடிந்து விடுகிறது.
கண்ணுக்கு முன்பே தெரியும் அற்புதத்தை அழகை ரசிக்க மறந்து எங்கே எப்போதோ யாரோ சொன்ன அம்புலிமாமா  கதைகளை நம்பி எல்லோரும் சென்று கொண்டிருக்கிறார்கள் போல தான் தெரிகிறது.
சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் இரவல் கதைகள்தான்.
ஒருவரினதும் சொந்த அனுபவமோ சொந்த புத்தியோ இல்லை என்பதை இங்கே நான் குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது.
நான் சொல்வது மட்டும் இரவல் அனுபவம் இல்லையா என்று நீங்கள் கேட்டால் அது மிகவும் நியாயமான கேள்விதான்.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பதில் சொல்லவேண்டியது எனது கடமை.
ஆம் எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன்.