Tuesday, December 8, 2015

நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? இதை உறுதிப்படுத்தினால் அது நிச்சயம் நிறைவேறும்...அது ஒரு ரகசியம் அல்ல ...

ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கை ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்க பட்டுக்கொண்டே ஓடுகிறது.
நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால்
தீர்மானிக்கப்படவில்லை,
இதை நம்புவது அல்லது ஏற்று கொள்வது மிகவும் கடினமான காரியமாகும்.
நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நாம் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாது,

எமது வாழ்க்கை  அல்லது எமது நோக்கம்  எமது விருப்பப்படியே  உருவாக்கப்படுகிறது எனில்,
ஏன் நாம் விரும்பியபடி எமது வாழ்க்கை  அமைவது இல்லை?

நிச்சயமாக நாம் விரும்பியபடிதான் எமது வாழ்க்கை அமையும்.
இதில் சந்தேகமே தேவை இல்லை,
நாம் எதை விரும்புகிறோம் என்பது மிகபெரும் உள்ளார்த்தம் உள்ள கேள்வியாகும்.
நாம் விரும்புவது என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் நாம் நிச்சயம் விரும்புகிறோமா?
நாம் விரும்பவில்லை என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் உண்மையில் நாம் விரும்பவில்லையா?
உதாரணமாக நாம் ஒருவரும் விபத்துக்கள் எமக்கு நடக்க வேண்டும் என்று விரும்புவதில்லை .
ஆனாலும் எமக்கு விபத்துக்கள் சிலவேளை நடக்கின்றதே?
அது எப்படி?
எமக்கு ஒரு விபத்து நடந்து விட்டால் அது எப்படி எமக்கு சம்பவித்தது?
நிச்சயமாக நாம் அதை விரும்பி இருக்க முடியாது.
நிச்சயம் நாம் அதை உருவாக்கி இருக்கவும் முடியாது.
எமக்குள் இருக்கும் எது அந்த விபத்தை எம்மை நோக்கி ஈர்த்தது?
நிச்சயமாக அந்த விபத்தை ஈர்க்கும்  ஏதோ ஒரு சக்தி எம்முள் இருந்துதான் உருவாக்கி இருக்கிறது.
எம்மை அறியாமலே நாம் உருவாக்கும் சக்திகளுக்கு இயங்கும் ஆற்றல் இருக்கிறது.